நேருக்கு நேர் விவாதம்: அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஹாரியின் முடிவுக்கு ராணி சம்மதம்!

Report

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரிக்கும், நடிகையுமான மேகன் மெர்கலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறப்போவதாக அண்மையில் அறிவித்தார். இந்தத் தம்பதியினர் ராஜ வாழ்க்கையை விட, சாதாரண மக்களுடன் பழகி அவர்களுள் ஒருவராக வாழ விரும்புவதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், மனைவி மேகனுக்கு தனது குடும்பத்தில் சரியான மரியாதை கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை ஹாரி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத், தந்தை சார்லஸ் உள்ளிட்டவர்களை கலந்தாலோசிக்காமலேயே ஹாரி இந்த முடிவை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இளவரசர் ஹாரியைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து ஹாரியும், அவரது மனைவியும் பிரிந்து செல்வது தொடர்பாக விவாதிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு ராணி எலிசபெத் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் பகுதியில் உள்ள அரண்மனையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து ராணியின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேகனுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரச குடும்பத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் ஹாரியும், மேகனும் கனடாவில் குடியேறும் முயற்சியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்து செல்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

1881 total views