ஐ.நா.வின் அறிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல்

Report

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய யூதக் குடியிருப்புகளுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சில நாடுகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து, இந்தப் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இதன் மூலம், அந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதற்கான சூழல் ஏற்படும் என்றும் இஸ்ரேல் அச்சம் வெளியிட்டுள்ளது.

அங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும் என , கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘யூதக் குடியிருப்புகள் தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது, சர்வதேச சட்டத்தையோ, சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிலைப்பாட்டிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற எங்களது நிலையில் மாற்றமில்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

இந்நிலையில் சர்வதேச நாடுகளால் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’யாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ள நிலையில் இந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் கூறி வருகின்றன.

அத்துடன் ஐ.நா.வும், இந்தக் குடியிருப்புகள் 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது. இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என அமெரிக்கா கடந்த நவம்பர் மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1715 total views