கொடிய கொரோனா... 1,500-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

Report

கோவிட் 19 வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1 500ஐ நெருங்கியிருக்கும் வேளையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வூகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட கொரோனா பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. வூகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 124 பேர் உயிரிழந்துள்ளதுடன் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 ஆயிரத்து 600 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவிற்கு வெளியே, மூன்றாவது மரணமாக ஜப்பானில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், உயிரிழந்தார்.

இதனிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவுக்கு சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) சொகுசு கப்பலில் இருக்கும் சுமார் 3700 பேரை ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

யோகோஹமா பகுதியில் கடந்த 4ம் தேதி முதல் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு, அதில் இருப்போர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எய்ட்ஸ் நோயைப் போல கோவிட் தாயிலிருந்து குழந்தைக்கு பரவுவதில்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் கொரோனா அதிகம் தாக்குதலுக்குள்ளான வூகான், ஹூபே உள்ளிட்ட மாகாணங்களில் பணிக்குச் செல்வோர் அனைவரும் வீடுகளில் இருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒருமாதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இணையதளம் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பணி ஓய்வு பெற்ற செவிலியர்களை சீன அரசு பணிக்கு வரும்படி அழைத்துள்ளது.

மேலும் சில வாரங்கள் முன்புவரை இறைச்சிக் கூடங்களில் அலைமோதிய சீனர்கள், தற்போது காய்கறிக் கடைகளை தேடி அலைந்து வருகின்றமை யும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1201 total views