உணவு தண்ணீர் இன்றி 40 மணி நேரம்: வெளிநாட்டு விமான நிலையத்தில் தடுப்புக்காவலில் தவித்த சுவிஸ் இளைஞர்

Report

பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததை கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்ற சுவிஸ் இளைஞர் தடுப்புக்காவலில் சிக்கிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது பாஸ்கல் என்ற இளைஞர் காலாவதியான கடவுச்சீட்டால் பல்கேரிய தலைநகர் சோபியா விமான நிலையத்தில் 40 மணி நேரம் தடுப்புக் காவலில் துயரம் அனுபவித்துள்ளார்.

பாஸ்கல் தமது 6 நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் ஒருவார காலம் விடுமுறையை கழிக்க முடிவு செய்து, பயணப்படுவதற்கு தயாராகியுள்ளார்.

அவர் பயணமாகும் அன்று இளைஞர் பாஸ்கலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவரது கடவுச்சீட்டு காலாவதியாகி இரு வாரங்கள் கடந்துள்ளதை அவர் புறப்படும் நாளில் கவனித்துள்ளார்.

விமானம் பல்கேரியா வழியாக செல்வதால், அந்த விமான ஊழியர்கள் இதுவொன்றும் சிக்கலை ஏற்படுத்தாது என உறுதியளித்து அந்த நண்பர்கள் குழுவை அனுப்பி வைத்துள்ளது.

இதனால், 150 பிராங்குகள் கட்டணம் செலுத்தி அவசர கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துள்ளார் பாஸ்கல்.

ஆனால் பல்கேரிய தலைநகர் சோபியாவில் இளைஞர் பாஸ்கலுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

சோபியா விமான நிலையத்தில் பாஸ்கல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், காலாவதியான கடவுச்சீட்டுடன் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் எஞ்சிய நண்பர்கள் தலையிட்டால், எவரையும் பயணத்தை முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் எனவும்ங்கிருந்த அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

இதனால் பாஸ்கல் மட்டும் விமான நிலையத்தில் பொலிசாரின் தடுப்புக்காவலில் தனித்துவிடப்பட்டார்.

அவரது நண்பர்கள் ஏதென்ஸுக்கு சென்று சேர்ந்த நிலையில், பாஸ்கல் சுங்க அலுவலகத்தில் ஒரு மர பெஞ்சில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருக்க வைக்கப்பட்டார்.

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, விமான நிலையத்தின் ஒரு கட்டடத்தில் ஒரு தடுப்புக்காவல் அறைக்கு பாஸ்கல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதுவரையில் அந்த இளைஞருக்கு சாப்பிடவோ தண்ணீரோ வழங்கப்படவில்லை. மேலும், விளக்கு வெட்டத்தில் இரவு தூங்க முடியாமலும் அவதிக்கு உள்ளானார்.

இதனிடையே, நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இளைஞர் பாஸ்கலின் தந்தை, சுவிஸ் வெளியுறவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி முறையிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சுவிஸ் அதிகாரிகள் பல்கேரியா மற்றும் ருமேனியாவிற்கான தூதரக பிரதிநிதிகளுடன் விவாதித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

இதனையடுத்து மொத்தம் 40 மணி நேரம் தடுப்புக்காவலில் அவதிப்பட்ட இளைஞர் பாஸ்கல், சுவிஸ் திரும்பினார்.

தொடர்ந்து சூரிச்சிலிருந்து அவர் பிராங்பேர்ட் வழியாக ஏதென்ஸில் உள்ள தனது நண்பர்களிடம் சென்று சேர்ந்தார்.

இருப்பினும் பாஸ்கலிடம் முறையான கடவுச்சீட்டு இருந்திருக்கவில்லை. சூரிச் விமான நிலையத்தில் அவசரகால கடவுச்சீட்டு பெறும் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும் என்பதால் அவர் காலாவதியான கடவுச்சீட்டுடனையே ஏதென்ஸ் சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் , முறையான கடவுச்சீட்டு இன்றி இதுபோன்று பயணப்பட வேண்டாம் என சுவிஸ் வெளிவிவகார அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

3687 total views