பிரான்ஸில் ஏற்பட்ட புயல் காரணமாக 1,000 பேர் பலி
இந்து மா சமுத்திரத்தில் உள்ள பிரான்ஸ் தீவான மெயோட்டியில் (Mayotte) மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 வருடங்களுக்குப் பின்னர் இப்படியான புயல் ஒன்று தாக்கியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவில் உள்ள பாரிய மருத்துவனை ஒன்று பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் ஜெனிவீவி டரியூசிக் (Geneviève Darrieussecq) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அனர்த்தத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
மகப்பேறு, சத்திர சிகிச்சை மற்றும் அவசர சேவை பிரிவுகள் முற்றாக செயலிழந்துள்ளன. 3 லட்சம் மக்கள் வாழும் மெயோட்டி (Mayotte) தீவு, பிரான்சின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்று என பதிவாகியுள்ளது.
தீவில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு இதுவரை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் காலநிலை மேலும் மோசமாகலாம் என பிரெஞ் சிவில் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரே ஜோஸ்சார்டு எச்சரித்துள்ளார்.