பங்களாதேஷில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பலி
பங்களாதேஷில் கடந்த ஜூலை மாதம் முதல் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இது 1971 சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் இரத்தக்களரி காலகட்டமாக அமைந்திருந்ததாக இடைக்கால சுகாதார அமைச்சின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கிளர்ச்சியாக தீவிரமடைந்தது, போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை ஆக்கிரமித்தனர்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து, பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் (Muhammad Yunus) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்பார்வை இழந்துள்ளனர் என இடைக்கால சுகாதார அமைச்சகத்தின் தலைவர் நூர்ஜஹான் பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கு ஒரு கண்ணிலும், இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. அத்தோடு, பலருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளது என மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        