விக்டோரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் விக்டோரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வசந்தக் காலம் தொடங்கிய வேளையிலேயே கடல் பயணத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
விக்டோரியாவுக்கு கிழக்கே உள்ள ஹரோ ஸ்ட்ரெயிட் பகுதியில், பாறைகளில் மோதிய படகில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் எனவும் மேலும், ஒருவர் மீட்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
'அபாச்சி' எனும் படகு சான் ஜுவான் தீவின் பாறைகளில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படகில் இருந்த ஒருவர் மெரீன் ரேடியோ மூலம் 'மேடே' (அவசரக் காப்புக் கோரிக்கை) அழைப்பு அனுப்பினார் என அமெரிக்கக் கடலோரக் காவல் படை (U.S. Coast Guard) தெரிவித்துள்ளது.
அவசர அழைப்பைப் பெற்ற உடனே, வாஷிங்டன் மாநிலத்தின் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் இருந்து இரண்டு மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது.
சான் ஜுவான் தீவின் கேடில் பாயிண்ட் பகுதியில் கடலில் படகுப் பாகங்கள் மிதந்த இடத்தில் மீட்பு குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.