ஒன்டாரியோவில் கோர விபத்து ; ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஈஸ்ட் கவிலிம்பரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலத்த காயமடைந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 12:35 மணியளவில் டோன் சாலை மற்றும் லெஸ்லி வீதி சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வாகனம் மாத்திரம் விபத்துக்குள்ளான இந்தச் சம்பவத்தின் போது, காரினுள் ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

காயமடைந்த மற்ற நால்வரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (Life-threatening) இருப்பதாகவும், ஒருவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக லெஸ்லி வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், மதியம் 12:30 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.