கனடாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் வாகனம் மீது மோதி விபத்து: ஒருவர் பலி!
கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 2:20 மணியளவில், 'பீச் கிங் ஏர் 200' ரக சிறிய ரக விமானம் ஒன்று பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள 'ஃபூட்ஹில்ஸ் போல்வர்டு' சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது.
அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதியது. விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். உயிரிழந்தவர் சாலையில் சென்ற வாகனத்தில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து நடந்த ஃபூட்ஹில்ஸ் பகுதி, நகர மையப்பகுதியையும் ஹாட் குடியிருப்புப் பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்றும், இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவசர மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்குப் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.
எனினும், விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்தவர்களில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற முழுமையான விவரங்களை காவல்துறை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, இந்தச் சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி "இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.