வான்கூவரில் காரை மோதச் செய்தவருக்கு எதிராக கொலை வழக்குகள் பதிவு
கனடாவின், வான்கூவர் நகரில் இடம்பெற்ற பிலிப்பைன் சமூக வீதி விழாவில், எஸ்யுவி வாகனத்தை கூட்டத்தில் மோதவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் இதுவரையில் ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வான்கூவர் நகரைச் சேர்ந்த 30 வயதுடைய காய்-ஜி ஆடம் லோ என்பவருக்கு எட்டுபிரிவுகளின் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டு மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
லோ, ஞாயிறு காலை அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்ட பிறகு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வான்கூவர் போலீஸ் துறை, ஞாயிறன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த துயரமான நிகழ்வை "நமது நகரின் வரலாற்றில் இருண்ட நாளாக" விவரித்தது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உயிரிழந்தவர்கள் 5 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.