'கார்க் தீவு' மற்றும் அணுசக்தி நிலையங்களைக் கைப்பற்ற ட்ரம்ப் திட்டம்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்கப் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்ப ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளும் 'கார்க் தீவை' (Kharg Island) அழிப்பதற்குப் பதிலாக, அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

எனினும், இது மிகவும் அபாயகரமான முயற்சி என இராணுவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகள் தவறான கைகளுக்குச் செல்வதைத் தடுக்க அமெரிக்க சிறப்புப் படைகளை அனுப்பவும், எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானின் கடற்கரைப் பகுதிகளில் தரைவழிப் படைகளை நிலைநிறுத்தவும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க இராணுவம் இதுவரை ஈரான் மீது 7,800-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்காவை ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது தரைவழிப் படைகளை அனுப்பப் பரிசீலிப்பது அவருக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், "ஈரானிய பயங்கரவாத அரசை அழித்துவிட்டு, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளிடமே அதன் பாதுகாப்புப் பொறுப்பை ஒப்படைத்தால் என்ன?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.