கனடாவின் இந்தப் பகுதிக்கு பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ என்னும் கல்லீரல் அழற்சி நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அமெரிக்காவின் முதன்மை பொது சுகாதார அமைப்பான சிடிசி (CDC) அங்கு செல்பவர்களுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஜூன் 4 அன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த 'லெவல் 1' எச்சரிக்கையை விடுத்தது.
தீவிரமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்து பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேனிடோபா மாகாணத்தில் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நோய் பரவல் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

784 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 186 வழக்குகள் பதிவாகியுள்ளன, 165 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மேலும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் தொற்று பொதுவாக மல-வாய்வழி பாதை (fecal-oral route) மூலமாகவே பரவுகிறது. அதாவது, கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பது, அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியவற்றால் எளிதில் தொற்றுகிறது.
தகுதியுடையவர்கள் அனைவரும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் எனவும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், உணவுக்கு முன்பும் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.