கனடாவில் பேருந்தில் இஸ்லாமியப் பெண்ணைத் தாக்கிய தமிழர் கைது
கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில் தர்ஹாம் பிராந்திய போக்குவரத்து பேருந்திற்குள் வெறுப்புணர்வால் தூண்டப்பட்டு இஸ்லாமியப் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 36 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த திருக்குமரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர் மீது தாக்குதல் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொராண்டோ பொலிஸாரின் செய்திக்குறிப்பு மற்றும் கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 13 அன்று புரோகிரஸ் அவென்யூ மற்றும் மில்னர் அவென்யூ பகுதியில் இப்பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்த ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண் ஒருவரை, சந்தேக நபரான திருக்குமரன் கந்தசாமி அணுகி அவதூறான மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்பெண்ணை "பயங்கரவாதி" என்று திட்டியதோடு, தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டு, திடீரென அவரை எட்டி உதைத்துவிட்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் பேருந்திலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இச்சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய டொராண்டோ காவல்துறையின் வெறுப்புக் குற்றப் பிரிவு புதன்கிழமை அன்று திருக்குமரன் கந்தசாமியைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனப் பொதுமக்களுக்குப் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் திருக்குமரன் தரப்பில் அதிகாரபூர்வ பதில்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.