கனடாவில் பெற்றோரின் காரை தெரியாமல் எடுத்துச் சென்றவர்கள்: விடுக்கப்டும் எச்சரிக்கை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒட்டாவா வெலி பகுதியில், நன்றி பாராட்டுதல் திங்கட்கிழமை அதிகாலையில் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை எடுத்துச் சென்று சிறுவர்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2:50 மணியளவில் பெம்பிரோக் மேற்குப் பகுதியில் காவலர் ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரு கார் சத்தமாக டயர்களைத் தேய்த்துச் செல்லும் ஓசையைக் கேட்டுள்ளார்.
இந்தத் தகவல் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த மற்ற அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, ஜான் அவென்யூ பகுதியில் அந்த வாகனம் கண்டறியப்பட்டது.

காவலர் காரை நிறுத்த முயன்றபோது, அது அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளது. எனினும், பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் அந்த வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜான் அவென்யூ மற்றும் டிவி டவர் ரோடு சந்திப்புப் பகுதியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மக்காச்சோளக் காட்டில் மோதி விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் கண்டறிந்தனர். விபத்து நடந்த இடத்தில் வாகனத்தில் யாருமில்லை.
இதனையடுத்து களமிறங்கிய காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவினர் , சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் கண்டுபிடித்தனர். விபத்தில் சிக்கிய சிறுவர்களுக்கு எந்தவிதமான தீவிர காயங்களும் ஏற்படவில்லை எனத் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
விசாரணையில், பெற்றோருக்குத் தெரியாமலும் அவர்களின் அனுமதியின்றியும் சிறுவர்கள் காரை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
சிறுவர்களின் வயது குற்றவியல் பொறுப்புக்குரிய வயதைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், அவர்கள் மீது எந்தக் குற்ற வழக்கும் தொடரப்படாது என்று காவல்துறை மற்றும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிறுவர்கள் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.