காஸாவில் மூன்று வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட 112 பேரின் உடல்கள்
காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மோதல் தொடங்கிய சில வாரங்களிலேயே குடியிருப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், அப்போது சுமாா் 40 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

தற்போதைய தற்காலிக போா்நிறுத்தத்தைத் தொடா்ந்து, ஹமாஸ் உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மீட்புக்குழுவினா் கடந்த வார இறுதியில் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டனா்.
அப்போது, 40 குழந்தைகள் உள்பட 112 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
பாலஸ்தீன கொடிகள் போா்த்தப்பட்ட இந்த உடல்களுக்கு, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீா்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், இறுதிப் பிராா்த்தனைக்குப் பிறகு அருகிலுள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், 157 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடா்கிறது.