116 கப்பல்கள் மீது தாக்குதல் ; முடக்கப்பட்ட ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் அசோவ் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. அசோவ் கடல் என்பது ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள, கெர்ச் நீரிணை வழியாகக் கருங்கடலுடன் இணையும் ஒரு கடலாகும்.
இந்நிலையில் உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் டான் அசோவ் கால்வாய் மற்றும் கெர்ச் நீரிணை வழியாக செல்லும் ரஷ்யக் கப்பல்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஏற்றுமதி பாதிப்பு
கடந்த 9 நாட்களில் மட்டும் அசோவ் கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான 116 கப்பல்களை உக்ரைனிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக உக்ரைனின் டிரோன் படைப்பிரிவுத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, சரக்குக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
ரஷ்யாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஏற்றுமதி இந்த அசோவ் கடல் துறைமுகங்கள் வழியாகவே நடக்கிறது. தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கான வர்த்தக விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் முற்றுகை நீடித்தால் ரஷ்யாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
மாற்றுப் பாதையாக கருங்கடல் துறைமுகங்களை ரஷியா பயன்படுத்த நினைத்தாலும், அறுவடைக் கால ஏற்றுமதியை தாங்கும் கொள்ளளவு அந்தத் துறைமுகங்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.