உக்ரைன் துறைமுக நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் ; 3 பேர் பலி
உக்ரைன்–ரஷியா போர் இன்று 1,599ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போர் ஆரம்பமானதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்த முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா மற்றும் மைகொலைவ் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கருங்கடல் பகுதியில் இயங்கிய ரஷிய கடற்படை கப்பல்களை குறிவைத்து உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.