மலேசியாவிற்கு மரப்படகில் செல்ல முயற்சித்த 119 ரோஹிங்கியா அகதிகள்!
மலேசியாவுக்கு வங்கதேசத்தில் இருந்து மரப்படகின் முலம் செல்ல முயற்சித்த 119 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் சைன்ட் மார்ட்டின் தீவு அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து இப்படகு மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையின் பேச்சாளர் சைபுல் இஸ்லாம் தெரிவித்திருக்கிறார்.
உள்ளூர் மீனவர் வழங்கிய தகவலை தொடர்ந்து படகு இருந்த பகுதிக்கு வங்கதேச கடலோர காவல்படை விரைந்திருக்கிறது.
இயந்திர கோளாறு காரணமாக அப்படகில் தண்ணீர் உட்புகுந்து கொண்டிருந்தது. நாங்கள் சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் படகு மூழ்கியிருக்கும்,” என சைபுல் இஸ்லாம் கூறியிருக்கிறார்.
அவரின் கூற்றுப்படி, 119 பேரில் 58 பேர் பெண்கள், 14 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மீட்கப்பட்ட படகுகளிலேயே அதிகபட்ச ரோஹிங்கியாக்களை கொண்ட படகு இது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை மாத காலத்தில் கடல் வழியாக செல்ல முயன்ற 500 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.