லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் 12 பேர் பலி
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்பல்லா (Hezbollah) அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் இன்று லெபனானின் கிழக்கு பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் ஆதரவு அமைப்பாகக் கருதப்படும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

அதன் பின்னர், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா தரப்பும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், லெபனானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிகா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இருப்பினும், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில், இந்த புதிய தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.