கனடாவில் கத்தி குத்து தாக்குதல்களுடன் தொடர்புடைய 5 சிறுவர்கள் கைது
கனடாவின் ஸ்கார்பரோவில் உள்ள சேர் வில்பிரட் லாவுரியர் Sir Wilfrid Laurier கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இரட்டை கத்தி குத்து சம்பவத்தில், ஒரு 12 வயது சிறுவன் உட்பட ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், கில்ட்வுட் பார்க்வே மற்றும் லிவிங்ஸ்டன் சாலை சந்திப்பு அருகே, அதாவது Sir Wilfrid Laurier கல்லூரியிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்றது.
பஸ்ஸிற்காக காத்திருந்த இரண்டு 15 வயது சிறுவர்களை, ஐந்து பேர் கொண்ட குழுவொன்று அவர்களிடம் செல்போன்கள் மற்றும் பணப்பை ஆகியவற்றைக் கேட்டு தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் போது, இருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் Sir Wilfrid Laurier கல்லூரியின் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12, 13, 14 மற்றும் 15 வயதான சிறுவர்களே இவ்வாறு சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு எதிராக கத்தி போன்ற ஆயுதத்துடன் கொள்ளை, உடல் காயம் ஏற்படுத்தும் தாக்குதல், மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தான ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"Youth Criminal Justice Act" சட்டத்தின் கீழ் குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.