கனடாவில் துப்பாக்கி முனையில் சிறுவனிடம் ஐபோன் பறிப்பு!
கனடாவின் மொண்ட்ரியால் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை, முகமூடி அணிந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது ஐபோனைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மொண்ட்ரியால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிவியர்-டெஸ்-பிரேரீஸ் பகுதியில் உள்ள பாஸ்குவாலே-காட்டுசோ பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, கோல் போஸ்ட்டிற்கு அருகில் தனது கறுப்பு நிற 'ஐபோன் 13 புரோ' போனை வைத்திருந்தார்.
அப்போது சுமார் 15 வயதான, 'ஸ்கை மாஸ்க்' முகமூடி அணிந்த மூன்று சிறுவர்கள் அணுகியுள்ளனர். அவர்களில் ஒருவன் தனது சட்டையை உயர்த்தி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி, "உன் போனை உடனடியாகக் கொடு" எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நிலைமையின் ஆபத்தை உணர்ந்த அச்சிறுவன், "பரவாயில்லை, போனை எடுத்துக்கொள்ளுங்கள்... எனக்கு எந்தப் பிரச்னையும், காயமும் வேண்டாம்" எனக் கூறி உடனடியாக போனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளான்.
போனைப் பறித்துக் கொண்ட அந்த கும்பல் டேனியல்-டொனி அவென்யூ வழியாகத் தப்பி ஓடியது. இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பன், உடனடியாக அவனது தாய்க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பதறியடித்துக்கொண்டு பூங்காவிற்கு ஓடிவந்த தாய், பயத்தில் உறைந்துபோய் இருந்த தன் மகனைக் கண்டு கண்ணீர் விட்டுள்ளார்.
பிற பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே சமூக வலைதளங்களில் இதைப் பகிர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியைக் கண்டதும் எதிர்த்துப் போராடாமல் போனைக் கொடுத்த சிறுவனின் செயல் மிகவும் சரியான மற்றும் அறிவார்ந்த முடிவாகும். இதுபோன்ற சூழல்களில் ஆபத்தை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.