அமெரிக்காவில் நண்பரை காண காரை திருடி சென்ற 12 வயதான சிறுமி!
அமெரிக்காவில் ஒன்லைன் வழியாக நட்பு கொண்ட நண்பரை காண அப்பாவின் காரை சிறுமி திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் புளோரிடா மாகாணத்தில் யூனியன் கவுன்டி பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுமி ஜேட் கிரிகோரி, லூசியானா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை ஒன்லைன் வழியே ஜேட் நட்பு கொண்டுள்ளார்.
தொடர்ந்து, அவருடன் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.அவரை ரொம்ப பிடித்து போக, அந்த நபரை நேரில் சந்திக்க சிறுமி முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனது தந்தையின் போர்டு ரக கார் ஒன்றை திருடி கொண்டு, அடையாளம் தெரியாத நபரை காண லூசியானாவுக்கு புறப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் தோழியான 14 வயதான குளோ லார்சன் என்பவரையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
திடீரென அவர்கள் இருவரும் காணாமல் போன சூழலில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
அந்த சிறுமிகளின் புகைப்படங்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டும், விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டும் தேடல் நடவடிக்கை தொடர்ந்தது.
ஆனால், சிறுமி கெயின்ஸ்வில்லே பகுதியில் இருந்து தனது தந்தையின் காரை 400km தொலைவுக்கு ஓட்டி கொண்டு, 5 மணித்தியாலம் பயணித்துள்ளார்.
அப்போது, அலபாமா மாகாணத்தில் கடை ஒன்றில் நிற்கும்போது தங்களது புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது பற்றி பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால், உள்ளூர் பொலிஸாரை அணுகுவது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் ஊடகத்தில் வெளியான செய்தியில், இந்த சிறுமிகள் யாரை சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளனர் என பொலிஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரால் கவரப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், சிறுமிகள் இருவரும் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்துள்ளனர்.