இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்தார்.
கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்திற்கு முன்பு அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது என வைத்தியர் மணில்கா சுமனதிலக மேலும் தெரிவித்தார்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் உள்ளவர்களாக பிறக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அதிக எடை அல்லது பருமனான பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் கர்ப்பத்திற்கு முன்பு தங்கள் அதிகப்படியான உடல் எடையை சுமார் 7 முதல் 10 சதவீதம் வரை குறைக்க முடிந்தால், இந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.