பட்டினியால் வாடும் 14 லட்சம் மக்கள் ; காட்டு விலங்குகளை கொல்ல திட்டம்
நமீபியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நமீபியா. இங்கு, கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பசி, பட்டினி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
723 விலங்குகளைக் கொல்வதற்கு முடிவு
இந்த நிலையில், அந்நாட்டில் பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்களில் , அந்நாட்டில் உள்ள 30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 ஆப்பிரிக்க சிறுமான்கள், 100 நீல காட்டுமான்கள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் மற்றும் 100 எலண்ட்கள் அடங்கிய 723 விலங்குகளைக் கொல்வதற்கு நமீபியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இவை, தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெறப்படும். மேலும், இந்த வேட்டையாடல் நடவடிக்கையானது அமைச்சகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில்முறை வேட்டைக்காரர்களைக் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.
மாங்கெட்டி தேசிய பூங்காவில் (Mangetti National Park) இதுவரை 157 விலங்குகள் வேட்டையாடப்பட்டிருப்பதாகவும், அவற்றிலிருந்து 9,56,875 கிலோகிராம் இறைச்சி எடுக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நமீபியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதேவேளை நமீபியாவைத் தவிர, ஜிம்பாப்வே, ஜாம்பியா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பட்டினி பேரழிவு நிலை என்று அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.