திருமணப் பேருந்து விபத்து 14 பேர் மரணம்; மணமகள் மட்டும் தப்பினார்
பாகிஸ்தானில் திருமண விழாவுக்கு விருந்தினர்களை ஏந்திச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அது ஆற்றுக்குள் விழுந்ததால் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மணமகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 25 பேர் இருந்த நிலையில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 10 பேரைக் காணவில்லை என்று மீட்புப்படை ஊழியர் தெரிவித்தார்.
மணமகளின் உயிருக்கு ஆபத்து இல்லை; அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மணமகனின் குடும்பம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வடக்கே 500 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்த நிலையில் அவர்கள் வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.