கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
கேரளா மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் நடந்த நிலச்சரிவால் இதுவரை குறைந்தது 158 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஊடகம் ஒன்றிற்கு கேரள முதலமைச்சரின் செய்தித்தொடர்பாளர் பி.எம்.மனோஜ் உறுதி செய்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் சிக்கிய 98 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 192 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வயநாடு பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த நிலச்சரிவானது நேற்றையதினம் (30-07-2024) அதிகாலை 2-3 மணியளவில் ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.