கனடாவில் புதிய வகை தொலைபேசி மோசடி!
கனடாவின் வடக்கு ஒன்டாரியோ பிராந்தியத்தில் பிரபல 'ரோஜர்ஸ்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரில் இடம்பெற்று வரும் புதிய வகை 'பொருட்களைத் திருப்பி அனுப்பும் மோசடி' காரணமாகப் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான டொலர்களை இழந்து வருகின்றனர்.
இம்மாநிலத்தின் சட்பரி நகரைச் சேர்ந்த ஜோன் லேண்ட்ரி எனும் பெண், இம்மோசடிச் கும்பலின் வலையில் விழுந்து தற்சமயம் ரோஜர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 17,000 கனடிய டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ரோஜர்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஜோன் லேண்ட்ரியைத் தொடர்புகொண்ட மோசடி நபர்கள், மிகக் குறைந்த விலையில் கவர்ச்சிகரமான கைப்பேசிச் சலுகையை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

அதனை நம்பி அவர் புதிய தொலைபேசியையும் அதன் சாதனங்களையும் ஆர்டர் செய்துள்ளார். இரண்டு நாட்களில் அப்பொருட்கள் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன.
எனினும், உடனடியாக மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட மோசடி நபர்கள், "உங்களுக்குத் தவறான கைப்பேசி அனுப்பப்பட்டுவிட்டது, அதைத் திருப்பி அனுப்ப வேண்டும்" எனக் கூறி, போலி முகவரிச் சீட்டை வழங்கி அப்பொருளைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
பின்னர், புதிய கைப்பேசியை ஆர்டர் செய்யுமாறும், முந்தைய தொகைக்கு மீளளிப்பு வழங்கப்படும் என்றும் அவரை நம்ப வைத்துள்ளனர்.
இவ்வாறாகத் தொடர்ச்சியாக 6 முறை அதே செயல்முறையைச் செய்ய வைத்து, இறுதியில் அவருக்கு எந்தக் கைப்பேசியும் கிடைக்காமல், சுமார் 17,000 டொலர்களுக்கான கட்டணப் பட்டியலை அவர் தலையில் சுமத்தியுள்ளனர்.
இது குறித்துத் தெரிவித்த ரோஜர்ஸ் நிறுவனம், இத்தகைய மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க இணையத்தளம், மின்னஞ்சல் மற்றும் பொதிகளில் எச்சரிக்கைச் செய்திகளை வழங்கி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை அடுத்து சேவைக் கட்டணங்களை ரத்து செய்து தொடர்ந்து அவருடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த சில வாரங்களில் மட்டும் இவ்வாறான சம்பவங்கள் குறித்துச் சுமார் 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சட்பரி பொலிஸ் பேச்சாளர் கெய்ட்லின் டன் உறுதிப்படுத்தியுள்ளார்.