வியட்நாமில் இருந்து தாயகம் திரும்பிய 152 இலங்கை தமிழர்கள்!
வியட்நாம் அருகே கடந்த மாதம் கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் திகதி, வியட்நாம் அருகே கடலில் 302 இலங்கை தமிழர்கள் ஒரு பெரிய படகில் சென்று கொண்டிருந்தனர்.
திடீரென படகு கவிழ்ந்ததால், அவர்கள் நடுக்கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவல் அறிந்து வியட்நாம் கடற்படை வீரர்கள் விரைந்து சென்று அவர்களை உயிருடன் மீட்டனர். வியட்நாமுக்கு அழைத்து வந்தனர்.
அந்த இலங்கை தமிழர்கள், வேறு நாட்டில் குடியேறும் எண்ணத்தில் தப்பிச்சென்றதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டது. அமைச்சகம் தரப்பில் இலங்கை தமிழர்களை சந்தித்து பேசினர்.
இதன் பலனாக, 152 இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பினர். வியட்நாம் - ஹோசிமின் நகரில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.