இந்தோனேசியா முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 16 பேர் பலி
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் சுமார் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (28) இரவு 8:31 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்த நேரத்தில் முதியவர்கள் பலர் தத்தமது அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பலரது சடலங்கள் அவர்களின் அறைகளுக்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடி அலுவலகக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் குறைந்தது 22 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 17,000 இற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் பாரிய தீ விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன.