துருக்கியில் பாடசாலையொன்றின் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயதுடைய அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 'ஷொட்கன்' ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், தாக்குதலை நடத்திய பின்னர் பாடசாலைக் கட்டிடத்திற்குள் மறைந்திருந்த அவர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 பேரில் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.