பாகிஸ்தானில் இடம்பெற்ற வேன் விபத்தில் 16 பேர் பலி
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி எனும் பழங்குடியின மக்கள் நேற்று (21) ஒரு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவிடத்திலேயே பலியாகினர்.
மேலும், இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.