ஒட்டாவா நகரில் கடைகளில் திருடிய 17 பேர் கைது
ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த கடைத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில், ஒட்டாவா நகரக் காவல்துறை நடத்திய சிறப்பு தீவிர நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலகட்டத்தில், ரிடோ தெருவில் அமைந்துள்ள குறிப்பிட்ட வணிக நிறுவனத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சில்லறை விற்பனைக் கடைகளில் நடைபெறும் திருட்டுகள் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, காவல் பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் காவல்துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் 17 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 17 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 பேருக்கு மாகாண சட்ட மீறல் அறிவிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
காவல்துறை எந்த நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், இது ரிடோ தெருவின் 300வது தொகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.
வணிக நிறுவனங்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைப் உடனடியாகப் புகாரளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் வணிகர்களுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.