பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த டிச.24 மற்றும் டிச.26 ஆகிய நாள்களில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையில், அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் இருநாள்களில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக, வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானின் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், நீண்டகாலமாக பலூசிஸ்தானை தனிநாடாக உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஏராளமான அமைப்புகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.