கிரேக்கத்தில் தீக்கிரையாகிய நிலையில் 18 சடலங்கள் மீட்பு!
கிரேக்கத்தில் காட்டுதீயினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியொன்றிலிருந்து 18; உடல்கள் தீக்கிரையாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக காட்டுதீ வேகமாக பரவிவரும் பகுதியிலேயே; உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. டாடியா காட்டுப்பகுதியில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்கள் குடியேற்றவாசிகளாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கிரேக்கத்தின் வடக்குகிழக்கில் உள்ள எவ்ரோஸ் பிராந்தியம் காட்டுதீயினால் பாதிக்கப்பட்டுள்ளது,துருக்கி எல்லைக்கு அருகில் இந்த பகுதி காணப்படுகின்றது.
வேகமாக பரவும் காட்டு தீ காரணமாக அலெக்ஸாண்டிரோபொலிஸ் நகரத்தின் மருத்துவமனையிலிருந்து நோயாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதிதாக பிறந்த குழந்தைகளும் அவசரசிகிச்சை பிரிவில் காணப்பட்ட நோயாளிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.படகு மூலம் அவர்கள் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் காற்றும் 40 செல்சியசிற்கு அதிகமான வெப்பநிலை காரணமாக கிரேக்கத்தில் பல நகரங்களில் காட்டுதீ பரவியுள்ளது. உயரமான பெரும் மரங்களை கொண்ட டாடியா பூங்காவிலிருந்து அலெக்ஸாண்டிராபொலிஸ் நகரத்தினை நோக்கி காட்டு தீ பரவுகின்ற நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அவசரசேவை பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிரேக்கத்தின் காட்டுதீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடியேற்றவாசிகளாகயிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
அவன்டாஸ் கிராமத்தில் குடிசையொன்றிற்கு வெளியே 18 உடல்கள் காணப்பட்டுள்ளன,தீக்கிரையாகிய வீட்டை தீயணைப்பு படையினர் சோதனையிட்டவேளை இது தெரியவந்துள்ளது.
கிரேக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடியேற்றவாசிகள் காட்டு தீயில் சிக்குண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கு ஆசிய சிரிய குடியேற்றவாசிகள் எவ்ரோஸ் பிராந்தியத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.