டேங்கர் லாரியால் நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த 18 வாகனங்கள் ; 8 பேர் பலி
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
அதன்பின் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி பலியாகினர்.
90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.