அமெரிக்காவில் மக்கள் குடியிருப்புக்குள் வெடித்து சிதறிய விமானம்
அமெரிக்காவின் லூயிஸ்வில்லே முகமது அலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS நிறுவனத்தின் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.
விமானத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் பறப்பதற்கான எரிபொருள் இருந்தது என்றும், விபத்து நடந்த இடத்தில் எரிபொருள் சுத்திகரிக்கும் நிலையம் இருந்தது என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் இருந்த 3 ஊழியர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

லூயிஸ்வில்லே முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி விபத்து நேற்று மாலை 5.15 மணிக்கு நடந்திருக்கிறது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இது குறித்து கூறுகையில், "ஹொனலுலு நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த MD-11 சரக்கு விமானம் டேக்-ஆஃப் ஆனதும், ஒரு இறக்கையில் தீப்பிடித்து, தரையில் மோதியது.
மோதியவுடன் பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவியது" என்று தெரிவித்திருக்கிறது.
லூயிஸ்வில்லே மேயர் கிரேக் கிரீன்பெர்க் கூறுகையில், "விபத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. தீயணைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து 8 கிமீ சுற்றளவுக்கு வெளியேறவும், அப் பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

விபத்துக்குள்ளான விமானம், 34 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த விமானம் 2006 முதல் UPS நிறுவனத்தில் சேவையில் இருந்துள்ளது.
விபத்து நடந்தபோது 175 அடி உயரத்துக்கு உயர்ந்து, 184 நாட்ஸ் வேகத்தை அடைந்த பிறகு, திடீரென தரையை நோக்கி இறங்கியுள்ளது.
விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியிருக்கிறது. விசாரணை முடிய 12-18 மாதங்கள் வரை ஆகலாம்.
🇺🇸✈️💥 A UPS Airlines cargo plane with flight number UPS2976 (a McDonnell Douglas MD-11F) crashed shortly after takeoff from Louisville Muhammad Ali International Airport (Kentucky, USA). #USA pic.twitter.com/LVfreVv4yB
— 🔰 Military-News (@MilitaryNewsEN) November 4, 2025