குப்பை காரணமாக சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு வருவதில் தாமதம்!
விண்வெளி குப்பை காரணமாக சீனா விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.

விண்வெளி குப்பை காரணமாக எதிர்பாராத நெருக்கடி
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, ஏற்கனவே ஆய்வு நிலையத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் ‘சென்ஷோ-20’ என்ற விண்வெளி பயண திட்டத்தின் மூலம் சென் டாங், சன் சாங்குரூயி மற்றும் வாங் ஜீ ஆகிய 3 விண்வெளி வீரர் குழுவினர் விண்வெளியில் தங்கள் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, பூமிக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.

அவர்களது பணியை தொடர்ந்து செய்வதற்காக ‘சென்ஷோ-21’ திட்டத்தின் மூலம் 3 விண்வெளி வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.
புதிதாக வந்த குழுவினரிடம் விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைத்த ‘சென்ஷோ-20’ குழுவினர், இன்றைய தினம் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில், விண்வெளி குப்பை காரணமாக எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் சுற்றித் திரியும் உடைந்த, செயலிழந்த விண்கலங்களின் பாகங்கள் உள்ளிட்டவை விண்வெளி குப்பைகளாக மிதந்து திரிகின்றன.
அத்தகைய விண்வெளி குப்பை வந்து மோதியதால், விண்வெளி நிலையத்தில் சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு கருதி ‘சென்ஷோ-20’ குழுவினரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தள்ளிவைக்கப்படுவதாகவும் சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.