நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழப்பு ; சமூக ஊடகத் தடை நீக்கம்
நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்த சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ப்ரித்வி சுபா குருங் இன்று காலை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மண்டுவில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
நேபாளத்தின் நாடாளுமன்றத்தைப் போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தின் போது நேபாள பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் குறைந்தது 19 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து 26 சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.