கனடாவில் காரில் மறைந்திருந்து இந்திய வம்சாவளியினரைக் கொன்ற மர்ம நபர்
கனடாவில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியாவில், பிரபல இந்திய வம்சாவளி தொழிலதிபரான தர்ஷன் சிங் (Darshan Singh Sahsi, 68), அவரது வீட்டினருகிலேயே மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபைச் சேர்ந்தவரான தர்ஷன், நேற்று காலை 9.22 மணியளவில், அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் மறைந்திருந்த ஒருவர், தர்ஷன் தனது காரில் ஏறியதும் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் தர்ஷனுக்கு முதலுதவி அளித்த நிலையிலும், காயங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டார் தர்ஷன்.
தர்ஷனைக் கொலை செய்த நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.