30,000 பேரை வேலையிலிருந்து நீக்கிய அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனம் அதன் 30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட்-19 காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் தேவையைவிடவும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்த்ததாகவும் அதனால் தற்போது செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆட்குறைப்பு
அமேசான் நிறுவனத்தில் மொத்தம் 1.55 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களில் 350,000 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள். அந்த அலுவலக ஊழியர்களில் தற்போது 10% பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் கிட்டத்தட்ட 27,000 பேரை ஆட்குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாரம் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் மனிதவளம், சேவை, இணையக் கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
மனிதவளப் பிரிவில் மட்டும் 15%ஊழியர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊழியர் பிரிவுகளைக் கையாளும் நிர்வாகிகளையும் ஆட்குறைப்பு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பவசதிகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் கூடுதலான ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.