H-1B விசா கட்டண உயர்வு ; அமெரிக்கா வெளியிட்ட புதிய தகவல்
அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் 19-ந்திகதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
விசா கட்டண உயர்வு
இது அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குதான் பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உள்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது