கட்டுமானத் தளத்திற்குள் டெஸ்லா கார் புகுந்த விபத்து: இருவர் பலி!
கனடாவின் பிக்கரிங் நகரில் உள்ள கட்டுமானத் தளமொன்றிற்குள் டெஸ்லா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் 'ஷாப்ஸ் அட் பிக்கரிங் சிட்டி சென்டர்' வணிக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் 75 வயது முதியவர் ஒருவர் டெஸ்லா காரைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த கார், வேலியை உடைத்துக்கொண்டு அருகிலிருந்த கட்டுமானத் தளத்திற்குள் புகுந்துள்ளது.

இந்த விபத்தில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 58 வயது ஆண் ஒருவரும், 21 வயதுப் பெண் ஒருவரும் காரில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸார் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
விபத்தை ஏற்படுத்திய 75 வயதுடைய டெஸ்லா கார் சாரதி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.