அமெரிக்கவில் 20,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் வெள்ளிக்கிழமை (13) சுமார் ஐந்து மணிநேரம் ஏற்பட்ட பாரிய முடக்கத்தால் 20,000-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்க ஒப்பந்ததாரரான L3Harris நிறுவனத்தால் பொருத்தப்பட்ட ரௌட்டர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய செப்புக் கம்பி தொலைத்தொடர்பு இணைப்புகளை நவீன ஒளியிழை (Fiber) இணைப்புகளாக மாற்றும் பராமரிப்புப் பணிகளை L3Harris நிறுவனம் அர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் முன்னெடுத்தது.
இதன்போது, பொருத்தப்பட்ட புதிய ரௌட்டர்கள், ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து வினாடிகளுக்கும் ஒருமுறை 1,000-க்கும் மேற்பட்ட இணைப்பு முயற்சிகளை ஏனைய ரௌட்டர்களுக்கு அனுப்பியுள்ளன.
இதனால் அமெரிக்காவின் 22 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் 17 மையங்களின் தரவுப் பரிமாற்றத்தில் பாரிய நெரிசலும் ஸ்திரமற்ற நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சினைக்கான மூல காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் நாடு தழுவிய ரீதியில் விமானப் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டது. வார இறுதிப் பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் வேளையில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் 20,000-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமடைந்தன அல்லது இரத்துச் செய்யப்பட்டன.