அமெரிக்காவின் 17-வது ட்ரோன் தாக்கி அழிப்பு; ஈரான் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது ட்ரோன் வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக இந்த மோதல் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

எனினும், அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதனை ஈரானும் தடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு உட்பட்ட காஷிம் தீவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பறந்து வந்த அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது ட்ரோன், இன்று மதியம் 2.30 மணியளவில் வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்து உள்ளது. புதிய நவீன வான்வெளி பாதுகாப்பு சாதனம் உதவியுடன் அந்த டிரோன் தாக்கப்பட்டு உள்ளது.
இது எதிரியின் தாக்குதல் திட்டத்தின் மற்றொரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டது. இதேபோன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை வெளியிட்ட செய்தியில், ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் ஹார்மூஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் செல்ல முயன்றன. எங்களுடைய ரேடார் மற்றும் பிற சாதனங்களை மீறி அவை சென்றன.
இந்த அங்கீகாரம் இல்லாத பகுதி வழியே யாருக்கும் தெரியாமல் ரகசிய பயணம் மேற்கொண்டு செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்கள் வழியிலேயே, கடல் கண்ணி வெடியில் சிக்கி, வெடித்து, தீப்பிடித்து எரிந்தன என தெரிவித்துள்ளது.