ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரிக்கை ; எலான் மஸ்க்கும் ஆதரவு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அதே பதவியில் நியமிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இணையவழி மனுவுக்கு, உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 1993ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை இணைந்து நிறுவிய ஜென்சன் ஹுவாங், சுமார் 33 ஆண்டுகளாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான சில்லுகள் உற்பத்தியில் என்விடியா உலகளாவிய முன்னணி நிறுவனமாக வளர்வதில் அவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தனிப்பட்ட உறவுகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12ஆம் திகதி அவர் தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
அவரது விலகலைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் (Colette Kress) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் எனக் கோரி இணையவழி மனுவொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எலான் மஸ்க், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், ஜென்சனை மீண்டும் நியமிப்பதற்கான மனுவில் தானும் கையெழுத்திடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பயனாளர் ஒருவரின் பதிவுக்குப் பதிலளித்த அவர், "ஜென்சனை மீண்டும் நியமிப்பதற்கான மனு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. அதில் நானும் கையெழுத்திடுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜென்சன் ஹுவாங்கைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்துவது கௌரவமாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜென்சன் ஹுவாங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜென்சன் ஹுவாங்கின் விலகலைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகக் குழு புதிய நிரந்தர தலைமைச் செயல் அதிகாரியைத் தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங்கின் விலகல் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சுயாதீன விசாரணையும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முக்கிய பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து வருவது இந்த விவகாரத்தை மேலும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.