மாண்ட்ரியல் அருகே பரபரப்பு– 18 வயது இளைஞர் உட்பட இருவர் பரிதாப மரணம்!
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், போலீஸார் துரத்திச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்ததில் காரில் இருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கியூபெக் மாகாணத்தின் போலீஸ் கண்காணிப்பு அமைப்பான BEI தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புதன்கிழமை அதிகாலை 1:11 மணியளவில், கியூபெக் மாகாண பொலஸார் சாலையில் சென்ற ஒரு காரைக் கவனித்தனர்.

அந்த காரின் உரிமையாளர் நன்னடத்தை உத்தரவை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால், போலீஸார் அந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், காரை ஓட்டிச் சென்றவர் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பிக்க அதிவேகமாக காரைச் செலுத்தியுள்ளார்.
பொலிஸார் காரைத் துரத்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மாண்ட்ரியல் நகருக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லாக் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த டெலிஸ்லே ஆற்றுக்குள் பாய்ந்தது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து கடுமையான காயங்களுடன் இருவரை மீட்டனர்.
உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உள்ளூர் ஊடகமான 'நூவோ இன்ஃபோ' வெளியிட்ட தகவலின்படி, காரை ஓட்டியவர் 18 வயது இளைஞர் என்றும், அவருடன் பயணித்த மற்றொரு நபரின் வயது மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.