கனடாவில் விமான பயிற்சியின்போது இந்தியர்கள் இருவர் பலி
2 Indian students killed in Canada plane crash during flight training: கனடாவில் விமான பயிற்சியின்போது நிகழ்ந்த விபத்தில் இந்திய இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கனடாவில் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்காத நிலையில், கனேடிய ஊடகம் ஒன்று, இந்திய இளைஞர்கள் இருவர் பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று, சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள Kisbey என்னுமிடத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இலக்கை அடையவேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் திரும்பாததால், விமானத்தை தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலை 6.00 மணியளவில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த இருவருமே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
வான்கூவரிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றிலிருந்து, உயிரிழந்தவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் ஸ்ரீனிவாசன் திருஞானசம்பந்தம் என தெரியவந்துள்ளது.
இருவரின் துயர முடிவு தொடர்பில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய துணை தூதரகம், அவர்களுடைய உடல்களை இந்தியா கொண்டுசேர்க்க அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.