போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க இராணுவம் அதிரடி தாக்குதல் ; 4 பேர் உயிரிழப்பு
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தெற்கு கட்டளைகம் (SOUTHCOM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கரீபியனில் உள்ள போதைப்பொருள் கடத்தல் பாதைகளில் இயங்கிய அதிவேகப் படகு ஒன்றின் மீது மேற்கு அரைக்கோள கூட்டுப் படைப்பிரிவு (Joint Task Force Western Hemisphere) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த படகு போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான படகு வெடித்துச் சிதறும் காட்சியைக் கொண்ட காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், நாட்டு மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவற்றுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக, கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசுபிக் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது வான் தாக்குதல்களை நடத்தி போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக Southern Spear என்ற நடவடிக்கை அமெரிக்காவால் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய "அமெரிக்காவின் கவசம்" (Shield of the Americas) என்ற புதிய பாதுகாப்புக் கூட்டணியையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.