கனிம சுரங்க விபத்து காங்கோவில் 200- பேர் மரணம்
ஆபிரிக்காவில் காங்கோவில், கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் ருபாயாவில், கோல்டான் கனிம சுரங்கம் உள்ளது. 'எம் 23' என்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுரங்கத்தில் இருந்தே, 'டான்டலம்' என்ற அரிய உலோகம் வெட்டி எடுக்கப்படுகிறது.

வெப்பத்தை தாங்கும் இந்த உலோகம் ஸ்மார்ட் போன், கணினி, விமான இயந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 28ல், கனமழை காரணமாக கோல்டான் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சுரங்கத்தின் பல பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், அருகில் இருந்தவர்கள் என ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் மாயமாகி இருப்பதால் பலி அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுகிறது.