ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
கனடா - ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது.

ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி
கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி, சொந்த ஊரான யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
பின் தொடர்ந்த ஆலய பிரச்சனை
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது.
ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.